ஞாயிறு, மார்ச் 18, 2018

தலையணை மந்திரம்


இப்பதிவின் தொடர்புடைய முந்தைய பதிவை படிக்க கீழே சொடுக்குக.

மங்களூர் தொழிலதிபர் அசோக் வர்மா பங்களா ஆசை மனைவி மணீஷாவின் மடியில் கிடந்தான் விவேக் ஸுக்லா...

ஏங்க நீங்க புதுசா வாங்கின பெங்களூரு கம்பெனியில உங்க தங்கச்சி புருஷனை மேனேஜிங் டைரக்டரா போடப்போறதா... உங்க அப்பா சொன்னாராமே அப்படியா ?
ஆமா அதனால என்ன ?
அதனால என்னவா ஏங்க நீங்க தனியா சம்பாரிச்சு வாங்குனதுல எப்படி உங்க தங்கச்சி புருஷனை போடலாம் ?
அவரு யாரு... உங்க பெரியப்பா மகன், உனக்கு அண்ணன்தானே ?
சரிதான் இப்படிப் பார்த்தா இந்த வீட்லதான் வரிசையா நாலு அண்ணன்மாரு வந்துருவாங்க யேன் வயித்துல வளர்ற உங்க புள்ளைக்கு நாளைக்கு என்ன சொல்லப் போறீங்க ?
பரவாயில்லையே. நம்ம புள்ளையப்பத்தி இப்பவே கவலைப்படுறியே ?
இந்த மழுப்புற வேலை வேண்டாம் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ?
மணீஷா நம் மகன் நம்ம அமைச்சர் தயவுல இந்த ஸ்டேட்ல இருக்குற எல்லா கம்பெனிக்கும் மேனேஜரா வருவான்.
ஹும் நான் நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதைப்பத்தி பேசுறேன் நீங்க நம்ம புள்ளையவும் மேனேஜராவான்னு சொல்றீங்க ?
மணீஷா இன்னைக்கு என்னாச்சு உனக்கு எங்க அம்மாகூட ஏதும் பிரச்சனையா ?
உங்க அம்மாகிட்ட பிரச்சனை செய்ய இங்கே நான் யாரு ?
யேன்... வில்லங்கம் விமலா மாதிரியே பேசுறே ?
நான் நேராவே வர்றேன் அந்த கம்பெனிக்கு நீங்க மேனேஜிங் டைரக்டராகி நாம பெங்களூரு பங்களாவுக்கு போகணும் உங்களால முடியுமா ? முடியாதா ?
கொஞ்சம் பொறும்மா நாளைக்கு எங்கப்பாகிட்ட பேசுறேன்.
வேண்டாம் உங்க அப்பாகிட்ட கேட்டா ? என்ன சொல்வாருன்னு தெரியாதா ?  யேன் நீங்க வாங்குன கம்பெனிக்கு, நீங்க மேனேஜிங் டைரக்டரா வர்றதுல என்ன பிரச்சனை ?
அப்படியெல்லாம் ஆக முடியாதுமா... கொஞ்சம் பொறு.
ஏன் முடியாது ? நம்ம லிங்குசாமி கம்பெனி வச்சுயிருக்காரு, நாஸர் வச்சுயிருக்காரு, உங்க நண்பரு அஷ்ரப் வச்சுயிருக்காரு அவங்களெல்லாம் வச்சுருக்கும்போது நீங்க வச்சு நடத்த முடியாதா ?
இன்னைக்கு அவுங்க குடும்ப நிலைமையை பார்த்தியா ? இது என்னவோ நடக்கும்னு தோனலை.
அப்படினா நான் நாளைக்கு எங்க அம்மா வீட்டுக்கு போறேன்.
மணீஷா இது தப்பு அடுத்த வாரம் வளைகாப்பு போட உங்க வீட்ல வர்றாங்க இந்த நேரத்துல போககூடாது.
வேண்டாம் எங்க வீட்ல வளைகாப்பு வச்சுக்கிறலாம் நான் போன் பண்றேன் நீங்க மட்டும் வந்தா போதும்.
வேண்டாம் இது சரியில்லடி.

விவேக் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விருடென எந்திரிச்சு கீழே வந்து வேறு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டாள் மணீஷா.

அடுத்து இதை மற்றொரு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி

வெள்ளி, மார்ச் 16, 2018

மஞ்சத்து மந்திரம்


மஹேந்திரபுரி மன்னன் மதுசூதனின் அரண்மனை பள்ளியறை மஞ்சத்தில் இளவரசி நளாயினியின் மடியில்... இளவரசர் இளமாறன்.

இளவரசே தாங்கள் போரிட்டு கைப்பற்றிய மங்கள தேசத்தை தங்கள் தமக்கையின் மணாளனுக்கு முடி சூட்டப் போவதாக மன்னர் அறிவித்திருப்பதாக அந்தப்புரத்தில் நான் கேட்ட செய்தி உண்மையா ?
ஆம் நளாயினி உண்மைதான் இது சந்தோசமான செய்திதானே ?
எப்படி சந்தோசமாகும் ? தாங்கள் அல்லவா போரிட்டீர்கள் தர்மப்படி தாங்கள் முடிசூடுவதுதானே முறையாகும் ?
அதனால் என்ன... முடிசூடிக்கொள்வது உனது சகோதரர்தானே ?
இப்படிப் பார்த்தால் இந்த அரண்மனையில் மட்டும், எனக்கு எட்டு சகோதரர்கள் ஆயிற்றே அப்படியானால் என் வயிற்றில் வளரும் தங்களின் மைந்தனுக்கு நாளை எதை முடி சூட்டுவீர்கள் ?
ஆஹா என் மணாளினிக்கு இப்பொழுதே என் மைந்தனைப்பற்றி கவலை வந்து விட்டதே பரவாயில்லையே !
சமாளிக்க வேண்டாம் எனது வினாவுக்கு விடை சொல்லுங்கள் ?
நம் மைந்தன் எதிர்காலத்தில் நம் குலதெய்வம் தொட்டிச்சியம்மன் அருளால் ஏழு உலகையும் சிறை பிடித்து இளவரசன் ஆவது நிச்சயம்.
ஹும் நான் தாங்கள் மன்னர் ஆவதைப்பற்றி பேசுகின்றேன், தாங்கள் நம் மைந்தனையும் இளவரசன் ஆக்குவதைப்பற்றி பேசுகின்றீர்களே !
இளவரசி இன்று என்ன ஆயிற்று உனக்கு... மகாராணியாரோடு ஏதும் பிணக்கா ?
மகாராணியோடு பிணக்கா அது எப்படி முடியும்... நான் வாழ வந்தவள்தானே... நான் யார் மகாராணியா ?
இன்று உனது பேச்சில் ஏதோ சூட்சுமம் தெரிகிறதே ?
ஆம் நான் நேராக விசயத்திற்கு வருகிறேன் மங்களதேசத்திற்கு தாங்கள் மன்னராகவும், நான் மகாராணியாகவும் முடியுமா ? முடியாதா ?
இளவரசி சற்றுப் பொறு நான் நாளையே மன்னரிடம் கலந்து ஆலோசிக்கிறேன்.
வேண்டாம் மன்னரிடம் ஆலோசித்தால் என்ன ஆகும் என்பது தாங்களுக்கு தெரியாததா ? தங்களின் வீரத்தால் மங்கள தேசத்தை கைப்பற்றிய தாங்கள் நேரடியாக மன்னராக முடியாதா ?
மன்னர் எனது தந்தையார் அல்லவா... அப்படி செய்ய இயலாது.
ஏன் இயலாது ? லிபியாவில் கடாபி ஆட்சி அமைக்க வில்லையா ? பாலஸ்தீனில் யாஸர் அராபாத் ஆட்சி அமைக்க வில்லையா ? பாக்கிஸ்தானில் கூட முஷாரப் ஆட்சி அமைக்க வில்லையா ? அவர்களால் கூட முடியும்போது மாவீரராகிய தாங்களால் ஏன் இயலாது ?
இன்று அவர்களின் நிலையை பார்த்தாயா ? இளவரசி இது நடக்காத காரியம் மட்டுமல்ல நடக்க கூடாத காரியமும்கூட.
அப்படியானால் நான் நாளையே கொங்குநாடு செல்கிறேன்.
இளவரசி இது தவறு உனது வளைகாப்பு வைபவம் நடக்கப் போவதால் நாடே கோலாகலப்படப் போகும் இந்த தருணத்தில் நீ உனது தாய் வீடு செல்வது சரியல்ல !
வேண்டாம் எனது வளைகாப்பு வைபவம் கொங்கு நாடே சிறக்க எனது தந்தையார் மன்னர் மலையரசர் நடத்துவார் தாங்கள் மட்டும் விருந்தினராக வந்து கலந்து கொண்டால் போதும்.
இளவரசி வேண்டாம் இது தவறு.

இளவரசன் இளமாறன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சட்டென எழுந்து மற்றொரு அறையில் நுழைந்து தாழிட்டுக் கொண்டாள் இளவரசி நளாயினி

அடுத்து இதை வேறு வகையில் பார்ப்போம் – கில்லர்ஜி

புதன், மார்ச் 14, 2018

சேனையனுக்கு எதற்கு குரங்கு ?


அன்பு நெஞ்சங்களே மேலேயுள்ள புகைப்படத்தில் மையத்தில் இருக்கும் வி..........யைத் தெரிகிறதா ? தெரியாமலா இருக்கும் ? நமது பாரதப்பிரதமர் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் மரியாதைக்குறிய திரு. மோடிஜி அவர்கள் ஒருமுறை ஃப்ரான்ஸில் நடந்த விழாவொன்றில் கலந்து கொள்வதற்காக போனது தாங்கள் அறிந்ததே அப்பொழுது சிறப்பு அரசு விருந்தினராக கண்ணகி பரம்பரையில் வந்தவர் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாய் இந்திய அரசின் செலவில் விசாவும், விமான பயணச்சீட்டும், பாரீஸ் பஸ் ஸ்டாண்ட் ஓரமாய் மூத்திரச்சந்தில் இருக்கும் வைத்தியநாதா லாட்ஜின் தங்கும் செலவும் வழங்கப்பட்டது விழாவை சிறப்பித்து வைத்தவர் இவரே... இந்த இடத்தில் சேனையனுக்கு எதற்கு குரங்கு ? என்ற பழமொழியெல்லாம் யாரும் கேட்காதீர்கள் இதையெல்லாம் நாம் யாருமே கேட்க முடியாது என்பது மட்டுமல்ல ஐந்து வருடம் கழித்தும் மறந்து விடுவோம் அதுதானே நமது பாரம்பரிய குணம் ஆனால் இவ்வழிகளில்... நான் கேட்பேன் காரணம் என் மனவேதனை. இவளுக்கு ஆன செலவில் எனது பணமும் ஒரு ரூபாயாவது இருக்கின்றதே என்ற ஆதங்கம் அதை வெளிப்படுத்த மட்டுமல்ல இந்தப்பதிவு வேறொரு கோணமும் உண்டு மேலேயுள்ள புகைப்படத்தை சொடுக்கி பெரியதாக்கி கூர்ந்து கவனித்த பிறகு பதிவை தொடருங்கள்...

பார்த்து விட்டீர்களா ? அந்தப் புகைப்படத்தில் முன்புறத்தில் அமர்ந்திருக்கும் மூவரில் மையத்தில் இருப்பவரே நமது வி...... மன்னிக்கவும் கண்ணகி இடதுபுறமும். வலதுபுறமும் அமர்ந்திருக்கும் மற்ற இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகளைப் பற்றிய சிந்தனையை விட்டு விடுவோம் மையத்தில் அமர்ந்திருக்கும் இவளுடன் புகைப்படம் எடுத்து விடவேண்டும் என்பதற்காக பின்னால் நிற்பவர்கள் எல்லாம் தனது படிப்புத்தகுதியால் ஃப்ரான்ஸில் வேலை வாங்கி நல்ல நிலையில் இருக்கும் இந்தியர்கள் வாழட்டும் வளமுடன் இவளும் ஒரு பெண்தானே என்றெல்லாம் மற்ற சராசரி மனிதர்களைப்போல் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் எனது குடும்பத்திலும் பெண்கள் உண்டு அவர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு ஆகவே மனதளவில் இவளை அவர்களுடன் ஒப்பிட மாட்டேன் இதனைப்படிக்கும் தாங்களும் எனது வகையே என்பதில் எமக்கு துளியளவும் ஐயமில்லை இவளுக்குப் பின்னால் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக எவ்வளவு பேர் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பின்புறம் நிற்கும் அந்த ஊதாக்கலர் சுடிதார், பக்கத்தில் நிற்கும் சிவப்பு கலர் சேலை இவர்களின் முகத்தின் ரேகையை சிறிது படியுங்கள்.

இவளைப் பார்த்ததும் ஏதோ உலகில் காணாததை கண்டதுபோல் நாட்டில் சினிமா நடிகைகள் கூடிக்கொண்டே போவதின் அடிப்படை காரணம் தொடங்குவது இந்த இடத்தில்தான் இவர்களை புழுவெனப் பார்க்கும் சிந்தனை நம் அனைவர் மனதிலும் தோன்றினால் நாட்டில் கண்ணகிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரும் என்பது எமது திண்ணமான எண்ணம் இவளைவிட நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் இது ஏன் ? உங்களுக்கு புரிவதில்லை இவளுடைய வாழ்வு முறையைப்பற்றி நான் விரிவாக எழுதித்தான் தங்களுக்கு தெரிய வேண்டுமா ? நான் எழுதுவேன் ஆனால் இலக்கணம் மீறிவிடும் ஆயினும் இதிலொரு சந்தோஷமும் எமக்குண்டு இதில் என் இன தமிழச்சிகள் இல்லை என்பதே... வாருங்கள் மானிடரே... சுயநலம் மறந்து பொதுநலம் யோசிப்போம்.  நமக்காக அல்ல நமது நாளைய சந்ததிகளுக்காக... அவர்கள் வாழ்வதற்காக இல்லாவிடினும் வீழாமல் இருப்பதற்காக...

எமது பேனா கோபமானது இருப்பினும் எந்நிலையிலும் கண்ணியம் தவறாது

திங்கள், மார்ச் 12, 2018

சொல்லுங்கோ...


மாஞ்சோலை கிராமம் சாலையோர டீக்கடையில்....

வணக்கம் ஐயா இங்கே பத்மநாபன்னு...
தம்பிக்கு எந்த ஊரு
தர்மபுரி
வாங்க டீ சாப்பிடலாம்
பரவாயில்லை நான் சாப்பிட்டேன்.
எந்த பத்மநாபன் நம்ம கோயமுத்தூர் மாப்ளே அவரா ?
இல்லை பட்ஜெட் பத்மநாபன்
அடடே நம்ம கந்தசாமி மகன்
ஆமா பட்டப்பெயர்கூட குருவிமண்டைனு சொல்வாங்க...
சரிதான் இப்படியே... நேரே போங்க, பீச்சாங்கை பக்கமா திரும்பவும் கிழக்கு வாசல் வரும் அதுதான்.
நல்லது ரொம்ப நன்றி
தெருவில் திரும்பியதும்...

விருமாண்டியண்ணே நல்லாயிருக்கீங்களா ?
அடடே வா கண்ணா வா என்ன திடீர்ன்னு உன் மனைவி வரலை ?
புறப்பட்டேன் மனைவி ரெடியாகலை வந்துட்டேன்.
புதுவீடு கண்டு புடிச்சு வந்திட்டியே... இது பத்மா கட்டியதுதான்,
வரும்போது குரு அத்தான் கிட்டே விபரம் கேட்டுத்தான் வந்தேன்.
அம்மா இப்ப எங்கே இருக்காங்க ?
அவுங்களுக்கென்ன ? மெட்ராஸ் டூ பாண்டிச்சேரிதான், எல்லா மாசமும்.
எல்லா தடவையும் நீ மட்டுமே வர்றே குடும்பத்தை கூட்டிட்டு வா.
அண்ணே அண்ணி இவங்களெல்லாம் எங்கே ஆளையே... காணோம் ?
இன்னைக்கு வெள்ளிக்கிழமை விரதம்ல பத்மநாபனை கூட்டிக்கிட்டு எங்கிட்டாச்சும் கும்புடப் போயிருப்பா வேண்டுதலுக்கு...
அண்ணே சாமி கும்பிடப் போகலையா ?
எப்பவுமே நான் கடவுள் இல்லைங்கிற சாதிதானே இதோ வந்துட்டா..

கண்ணா நல்லாயிருக்கியா ? மண் வாசனை இழுத்துருக்கு இந்தப்பக்கம்.
கிழக்கு சீமையிலே கால் வைக்காமல் இருக்க முடியுமாண்ணி ?
என் தங்கை கல்யாணி குழந்தைங்க, எப்படியிருக்காங்க ?
இருக்காங்கண்ணி பத்மா நல்லா இருக்கியா... எந்த கோவில் போனீங்க ?
நல்லாயிருக்கேன் நவக்கிரக நாயகிக்கு படையல்,
வைஜயந்தி இன்னும் கல்லூரியிலிருந்து வரலையா.... படிப்பெல்லாம் எப்படிணே போகுது ?
வைஜயந்தி ஐ.பி.எஸ்தான் படிப்பேனு சொல்றாடா...
நம்ம புள்ளையாவது படிக்கட்டும்ணே, நாந்தேன் படிக்காதவன் ஆயிட்டேன்.

படிக்காட்டாலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்துறியே அது போதும்.
இருந்தாலும் அ.ஆ.இ.ஈ கூட படிக்கலையேணே...
உன்னைப்போல அறிவாளி யாரு சொல்லு ?
எல்லாம் என்னோட விதி வேறென்ன ?
நம்ம வீட்டுக்கு படிக்காத மேதையா வந்துட்டியே...
படிக்கிற ஆசை மட்டும் விடமாட்டுதுணே...
விடுடா உன்னைப்போல உழைப்பாளி படிச்சவன் எவன் இருக்கான் ?  
காலம் பூராம் தொழிலாளியாவே போயிட்டேனே..
ஏன் அப்படி நினைக்கிறே ? விவசாயினு நினைச்சுக்க.
சரிண்ணே நான் கிளம்புறேன் காடு கரைக்கு போகணும். ஏண்ணே பத்மாவுக்கு நிச்சய தாம்பூலம் முடிஞ்சு வருஷமாச்சு கல்யாணம் எப்போ வயசு கூடுதுல ?
தைப்பிறந்தால் வழி பிறக்கும் பார்ப்போம் சரி, உன் மகனுக்கு அரசாங்க வேலை என்னாச்சு ?
சொல்ல மறந்துட்டேனே... ஜனவரி 1 டூட்டியில ஜாய்ண்ட் பண்ணிட்டான்.
சந்தோஷம் செல்வி கண்ணாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாடி..

வேண்டாண்ணி இப்பத்தான் சாப்பிட்டேன், ஊருல தேர்த்திருவிழா கண்டிப்பா குடும்பத்தோட வந்துடணும், சொல்றதுக்குத்தான் வந்தேன்.
கந்தர் அலங்காரம் பார்த்து ரொம்பநாள் ஆச்சு..
போன வருஷம் தைப்பொங்கல் விழாவுக்கு வந்தீங்கள்ல ?
ஆமா அப்பத்தானே தேர்ல தீ பிடிச்சது...
ஆமா இந்த வருஷம் வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகமும் வச்சு இருக்காங்க..
வந்துர்றோம் மாயாண்டி குடும்பத்தார் வருவாங்களா ?
அவுங்க வராமலா திருவிழா முதல் மரியாதை அவுங்களுக்குத்தானே...
நம்ம கும்பக்கரை தங்கையா மச்சான் வருவாரா ?
அவருக்கும், நம்ம நாட்டாமைக்கும் சண்டை அதனால் வரமாட்டார்.
இவெங்க சண்டைக்கு தெய்வம் என்ன செய்யும்... ?

அதானே பார்த்தேன் நம்ம தெய்வமகன் வாயைத் திறக்கலையேனு...
உண்மைதானடி சொல்றேன் கண்ணா, அவரு மகன் ராஜா என்ன செய்யிறான்... ?
அவன்தான் ரவுடியாகி அந்த ஏரியாவுக்கே குப்பத்து ராஜா ஆயிட்டானே..
அவன் சின்ன வயசுலயே தில்லாலங்கடியில... இப்ப சொல்லவா வேணும்.
சரிண்ணே மழை வர்ற... மாதிரி இருக்கு கிளம்புறேன் கண்டிப்பா எல்லோரும் வந்துடுங்க.
சரிப்பா இப்ப சுந்தரா டிராவல்ஸ் வரும் கவனமாப் போயிட்டு வா.

நட்பூக்களே... இதில் வரும் ஒவ்வொரு கேள்வி பதில்களிலும் சில வார்த்தைகள் BOLD-ல் இருக்கிறது அதன் காரணமென்னஉங்களில் யாருக்காவது பிடிபட்டால் சொல்லுங்களேன்.

வெள்ளி, மார்ச் 09, 2018

கண்ணங்குடி, கண்புடுங்கி கண்ணப்பன்


நான் என்ன தவறிழைத்தேன்
சொல்லடி செல்லப் பெண்ணே
என்னை அழகில்லை என்று
சொல்லி விட்டாய் கண்ணே

உன்னை மறக்க நான் உலகை
மறக்க வேண்டும் பெண்ணே
என்னை துறக்க என்றுமே எனக்கு
உடன்பாடு இல்லை கண்ணே

உன் நினைவுகளே என்னை
கொன்று விடுமோ பெண்ணே
நான் இறந்தால் கண்ணை எடுத்து
விடச்சொல்வேன் கண்ணே

அந்தக் கண்ணை ஒரு ஆணுக்கே
பொருத்தச் சொல்லி பெண்ணே
அவனை தினம் உன்னை பார்த்து
ரசிக்கச் சொல்வேன் கண்ணே

மனித அன்பை உணந்து அறிந்திட
தெரியாத அழகிய பெண்ணே
அவனையாவது நீ புரிந்து கொள்ள
முயற்சி செய்வாய் கண்ணே

நானறிவேன் உனது பதி எனது
கண்ணை பொருத்தியவனே பெண்ணே
காரணம் அவன் உறுதியாக
செல்வந்தனாகத்தான் இருப்பான் கண்ணே

என் கண்ணோடு நீ நீடூழி காலம்
வாழ்ந்து நலம் பெறுவாய் பெண்ணே
அவன் உன்னை கண்ணோடு கண்ணாக
பார்த்து கொள்வான் கண்ணே

மறுபிறவியில் எனக்கு மீண்டும்
மானிடப்பிறவி இருந்தால் பெண்ணே
நிச்சயமாய் நான் அழுக்கில்லா
அழகப்பனாக பிறந்து வருவேன் கண்ணே

அப்பொழுதாவது என்னை அன்புடனே
ஏற்றுக்கொள்வாயா பெண்ணே
மீண்டும் என்னை யாசித்தால்
கண்ணை பிடுங்கி எறிவேன் கண்ணே


சிவாதாமஸ்அலி-
நீ மறுபிறவி எடுத்து வந்து என்ன ஆயிடப்போகுது ? உன்னைப்போல கூதரைகளைத்தான்டா ஐயா அப்துல் கலாம் மேலே தேடிக்கிட்டு இருக்காரு...
Related Posts Plugin for WordPress, Blogger...